En Sarithiram (Tamil) Paperback

Save 10%
SKU: BK 0053007

Price:
Rs. 270 Rs. 300
Add to Wishlist

Description

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் தமிழ்த் தாத்தா அவர்களே!
கல்தோன்றும் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி, இன்றைக்கும் இளமை குன்றாமல் இருப்பதற்கு தமிழ் அறிஞர்களின் தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்புதான் முக்கியக் காரணம். தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில் தனித்து நிற்பவர் உ.வே.சா. தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சா. அவர்களின் தீவிரமான தேடுதலில் விளைந்த படைப்புகளே ஆதாரங்கள்.
இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உ.வே.சா. அவர்கள், தமிழின் அரும்பெரும் நூல்கள் எப்படி எல்லாம் மீட்கப்பட்டன என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். பதிப்பிக்கப்பட்ட பேரறிவுப் புத்தகங்களை வாசிக்கும் நாம், அவை எப்படி எல்லாம் தமிழ்த் தாத்தாவால் மறு சீரமைக்கப்பட்டன என்பதை அறிய வேண்டியது வரலாற்றுக் கடமை. இதனை அணிந்துரை வடிவில் செவ்வனே வலியுறுத்தி இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. ‘கொள்ளக் குறையாத சரித்திரமாக’ இதனைச் சுட்டிக்காட்டிச் சிலிர்க்கிறார் ஒளவை நடராசன்.
ஓலைச்சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களை அச்சு வடிவில் மீட்டுக் கொடுத்த தமிழ்த் தாத்தாவின் சுய சரித்திரம் இது. தமிழ்த் தலைமுறையினர் தங்களின் பெருமைமிகு அடையாளமாக - பேரறிவுப் புதையலாக - தூய பரிசாக - தொன்மைச் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டிய இந்த அரிய நூலை, தொன்மை குன்றாத சிறப்போடு வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது.

You may also like

Recently viewed by You