Description
ஆர். முத்துக்குமார் / R. Muthukumar
புத்தகத்தை பற்றிய குறிப்பு:
இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர, அவசியத் தேவை. அதனை உணர்ந்து, சிப்பாய் புரட்சி, இந்து மகா சபாவின் ஆரம்பம், ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய், இந்தியப் பிரிவினை, ஜனசங்கத்தின் உருவாக்கம், எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள், ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம், பாஜக உருவான கதை, ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம். காந்தி படுகொலை, காமராஜர் கொலைமுயற்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம், மண்டைக்காடு கலவரம், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பொடா சட்டம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம், இந்துத்வ அரசியலின் எழுச்சி, வீழ்ச்சி, மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்திய, தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.
எழுத்தாளர் பற்றிய குறிப்பு:
ஆர். முத்துக்குமார். மயிலாடுதுறையில் பிறந்தவர். ஏ.வி.சி. கல்லூரியில் இளங்கலை (இயற்பியல்), முதுகலை (கணிப்பொறிப் பயன்பாட்டியல்) பயின்றவர். தற்போது சென்னையில் வசித்துவருகிறார். கடந்த எட்டு வருடங்களாகப் பத்திரிகை மற்றும் பதிப்புத்துறையில் இயங்கிவருகிறார். தற்போது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸின் ஆசிரியராக இயங்கிவருகிறார்.
இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்து விரிவான வாசிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு வருபவர். தமிழின் முன்னணி இதழ்களில் அரசியல் கட்டுரைகளும் தொடர்களும் எழுதிவருகிறார். அரசியல், வரலாறு, நடப்பு அரசியல் சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), தமிழக அரசியல் வரலாறு (இரண்டு பாகங்கள்) என்ற இரண்டு பெரு நூல்களும் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றவை. இந்திய அரசியலின் ஆகப்பெரிய ஆளுமைகளான பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையைப் புத்தகமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவரது சமீபத்திய புத்தகம், கச்சத்தீவு: தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்.